யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான கைவினைப் பொருட்கள் உற்பத்திப் பயிற்சிநெறி

Mathan | Sunday, October 04, 2015 |

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கின்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு விதவைகளான பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கைவினைப் பொருட்கள் உற்பத்தி பயிற்சிநெறி ஒன்று உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சிநெறி தற்போது மட்டக்களப்பில் உள்ள எமது நிறுவனத்தின் காரியாலய மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது இந்த பயிற்சி நெறியில் ஊனமுற்றோர் பராமரிப்பு இல்லத்தில் தங்கியுள்ள ஊனமுற்ற பெண்களும் யுத்தத்தினால் கணவனை இழந்த விதவைகளும் கலந்துகொண்டு பயிற்சிபெற்று வருகின்றனர்.
இந்தப் பயிற்சிநெறியினை வடக்கு கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட கோறளைப்பற்று வடக்கு வாகரை செங்கலடி மண்முனை மேற்கு வவுணதீவு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை வெல்லாவெளி மண்முனைப்பற்று ஆகிய 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் பயிற்சிநெறி நடைமுறைப்படுத்தப்படும்.
ஏனை 7 மாவட்டங்களிலும் எந்தெந்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் பயிற்சிநெறி நடாத்தப்பட வேண்டி உள்ளதென இனங்காணப்பட்டு அங்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் உடனடியாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
இத்திட்டத்தின் மூலமாக வெறுமனே பயிற்சிநெறியினை மட்டும் வழங்காது பயிற்சிபெற்று வெளியேறும் பெண்கள் உடனடியாக உற்பத்தியில் ஈடுபடுவதற்கும் அவர்களினால் உற்பத்தி செய்யப்படும் கைவினைப் பொருட்களை உரியமுறையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சந்தைப்படுத்துவதற்குமான அனைத்து ஏற்பாடுகளையும் எமது நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
பன்புல் மற்றும் பனை ஓலை என்பவற்றினை முலப்பொருளாகக் கொண்டு எவ்வாறான கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்தால் சந்தைப்படுத்துவதற்கும் அதிக இலாபம் பெறுவதற்கும் வழிகோலும் என்பதற்கிணங்க ஒரு சில கைவினைப் பொருட்கள் இனங்காணப்பட்டு அந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கான குறுகியகால பயிற்சியே தற்போது வழங்கப்பட இருக்கின்றன.
உலகில் எவ்வகையான கைவினைப் பொருட்களுக்காக அவ்வப்போது உருவாகும் கேள்வியினையும் அவற்றிக்கான சந்தைப்படுத்தல் வசதியையும் கருத்தில்கொண்டு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்கான பயிற்சிகள் இனங்காணப்பட்டு அப்பயிற்சிகளை குறித்த பயிற்சியாளர்களுக்கு வழங்குவதற்கும் எமது நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஒரு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 25 பயிற்சியாளர்களுக்கு 4 வாரப்பயிற்சி வழங்குவதற்காக இலங்கை ரூபா 250,000.00 தேவையாக உள்ளது.
பயிற்சியாளர்கள் பயிற்சியினை பெற்று வெளியேறியவுடன் உடனடியாக உற்பத்தியில் ஈடுபடுவதற்கான சகல வழிவகைகளையும் எமது நிறுவனம் மேற்கொண்டுள்ளது. உற்பத்தியில் ஈடுபடும் ஒரு பெண் ஒரு நாளைக்கு குறைந்தது 500.00 ரூபா ஊதியமாகப் பெறும் வகையிலேயே குறித்த கைவினைப் பொருளுக்கான உற்பத்திக்கூலி தீர்மானிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு விதவைகளாக உள்ள வடக்கு கிழக்கு பகுதிகளில் வசிக்கின்ற எமது உறவுகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்க வேண்டும் என நினைக்கும் புலம்பெயர் உறவுகள் இந்தத் திட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு உதவி புரியலாம்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நன்கொடைகளாக பணங்களை வழங்குவதால் எவ்வித பயனையும் அவர்கள் அடையமாட்டார்கள். மாறாக இவ்வாறான பயிற்சிகளை அவர்களுக்கு வழங்குவதால் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கு வேண்டிய வருமானங்களை தாங்களாகவே தேடிக்கொள்ளும் வாய்ப்பு இங்கு உருவாகின்றது.
அத்துடன் எதுவித வாழ்வாதார வழிவகைகளுமற்ற நிலையில் சமுதாய சீர்கேடுகளில் ஈடுபடும் யுத்தத்தினால் விதவைகளான இளம் பெண்களை இப்பயிற்சித் திட்டத்தில் உள்வாங்கி தொழில் வளங்குவதால் எமது சமுதாய பண்பாடுகள் சீரழிந்து போகாமல் பாதுகாக்கலாம்.
இந்தத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு லோட்டஸ் குறூப் (லண்டன்) நிதி உதவி வழங்கியுள்ளது. ஆனால் பூரணமாக இத்திட்டத்தை சகல பகுதிகளிலும் செயற்படுத்துவதற்கு தேவையான நிதி உதவிகளை நன்கொடையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழ்கின்ற இலங்கைத் தமிழ் மக்களிடமிருந்து இந்தத் திட்டத்திற்காக உதவிகளை எதிர்பார்க்கின்றோம்.





























Category: ,