உளநலப் பாதுகாப்பை வலுப்படுத்த கிழக்கு மாகாணத்தில் புதிய வேலைத்திட்டம்! உலக நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் தெரிவிப்பு!
உளநலப் பாதுகாப்பை வலுப்படுத்த கிழக்கு மாகாணத்தில் புதிய வேலைத்திட்டம்!
உலக நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் தெரிவிப்பு!
உளநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மக்களிடையே உளநல விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேவையான ஆலோசனை வழிகாட்டல் மற்றும் ஆதரவுச் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில், கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் புதிய ஒருங்கிணைந்த சமூக அபிவிருத்தி வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக உலக நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் ஈ. கங்காதரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு உள சமூக ஆதரவு மையத்தின் 26 ஆண்டு கால சேவையின் மைல்கல் நிகழ்வாக, தேசிய மட்டத்திலான பல்வேறு பொறுப்புகளுக்கான நியமனங்களும் தொண்டர்களுக்கான நியமனங்களும் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்புச் செயலாளர் உமர் கதாப் அப்துல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தேசிய மட்ட நியமனங்களை வழங்கி வைத்தார்.
சர்வதேச உளவியல் சார் கற்கைகள் நிலையத்தின் பணிப்பாளரும் உளசமூக ஆதரவு மையத்தின் தலைவியுமான தேவரஞ்சினி பிரான்சிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, MIU பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் உளசமூக ஆதரவு அமைப்பின் தேசிய ஆலோசகருமான தேசபந்து கௌரவ கலாநிதி எஸ். பிரான்சிஸின் நெறிப்படுத்தலில், மட்டக்களப்பு உளவியல் சார் கற்கைகள் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றது.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது:-
உளநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, அதற்கான விழிப்புணர்வு மற்றும் ஆதரவுத் திட்டங்களை முன்னெடுப்பது காலத்தின் அவசியம் மட்டுமன்றி, சமூகத்தின் கூட்டுப் பொறுப்புமாகும்.
இதற்கமைய, உளநலப் பிரச்சினைகளை எதிர்கொள்வோருக்குத் தேவையான வழிகாட்டலையும் ஆதரவையும் வழங்குவதுடன், உளநல ஆலோசனைச் சேவைகளை சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கில், ஒருங்கிணைந்த சமூக அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் புதிய வேலைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத் திட்டத்தை எதிர்வரும் 2027 ஜனவரி மாதம் முதல் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பகட்ட ஆயத்த மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் இணைத்து உளநல விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்தோடு, உளநலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்கள் தங்களுக்குத் தேவையான ஆலோசனை வழிகாட்டல் மற்றும் பொருத்தமான ஆதரவுச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், தேவைக்கேற்ப உளநல ஆற்றுப்படுத்தல் மையங்கள் மற்றும் ஆலோசனைச் சேவைகளை உள்ளடக்கியதாக இத்திட்டத்தை விரிவுபடுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனைச் செயற்படுத்துவதற்காக சர்வதேச உளவியல் சார் கற்கைகள் நிலையத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளோம்.
உளநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்கள் வயது, சமூகப் பின்னணி உள்ளிட்ட வேறுபாடுகளைக் கடந்து தேவையான ஆதரவையும் வழிகாட்டலையும் பெறக்கூடிய சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரச நிறுவனங்கள், கல்விச் சமூகத்தினர், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
Category:


